3

“இந்தப் புடவை நல்லா இருக்கா, பாருங்க!”

தியாகு முகத்தைச் சுளித்தான்.

முப்பது வயதுகூட ஆகவில்லை. இப்போதே பிடித்து, பழுப்பிலும், அரக்கு நிறத்திலுமா உடுத்துவார்கள்? “வேற நல்ல கலராக் கிடைக்கல? இது என்ன, வயசானவங்க கட்டறமாதிரி!“

லதா கலீரெனச் சிரித்தாள். “என்னடா ஒங்க மூஞ்சி அப்படிப் போச்சேன்னு பாத்தேன். எனக்குன்னு நினைச்சீங்களா? அத்தைக்கு!“

அவன் முகம் மேலும் இறுகியது, அம்மாவின் பெயரைக் கேட்டதுமே. ஒரு கார் வாங்கக்கூட வக்கில்லாமல் இருக்கிற இருப்புக்கு, படுத்த படுக்கையாக இப்போது இருக்கும் நிலையிலும் அம்மாவை ஆள் வைத்துக் காப்பாற்றுகிறானே! அதுவே பெரிது. ஓரவஞ்சனை காட்டாது, தம்பி சூரியாமேல் காட்டிய அன்பில் பத்தில், இல்லை, நூற்றில் ஒரு பங்கைத் தன்மேல் காட்டியிருந்தால்கூட எவ்வளவோ முன்னேறி இருக்கலாம். மழை பெய்தால் ஒழுகும் இந்த வாடகை வீட்டில் திண்டாடிக்கொண்டு இருக்கவேண்டாமே!

தன்னையும் அறியாமல் வலது கை கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் முன்பற்கள் இரண்டின்மேல் வைத்து அழுத்திக்கொண்டிருந்த கணவனை ஏதும் விளங்காதவளாய் பார்த்தாள் லதா.

“புடவை நல்லா இல்லியா?“  குரலில் ஏமாற்றம். முகம் வாட, “வயசானவங்களுக்குன்னு கேட்டு எடுத்தேன்“.

சிறுவயதில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்! எத்தனை எத்தனை அவமானங்கள்! இதெல்லாம் புரியாது, இவள்கூட அம்மா பக்கம் சாய்ந்துவிட்டாளே என்ற வருத்தம் வந்தது தியாகுவுக்கு.

“எனக்கு எதுவும் வாங்கி இருக்கமாட்டியே?“ என்று ஆற்றாமையுடன் கேட்டவனைக் குறும்புடன் பார்த்தாள் லதா. “ஏன்? அப்புறம் அதுவும் கலர் நல்லா இல்லேன்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்கவா?“

அவளது கேலி புரியாது, “அது என்னமோ, என்னைக் கண்டா யாருக்குமே பிடிக்கறதில்லே!“ என்று அரற்றினான், வளர்ந்த குழந்தையாக.

அவன் தோளைச் செல்லமாக அழுத்தினாள் மனைவி. “என்னங்க இது! ஒங்களுக்குச் சாமான் வாங்கற சாக்கில இன்னொருவாட்டி ஷாப்பிங் போகலாம்னு நினைச்சா..!“

தன் மன உளைச்சலிலேயே அமுங்கிவிட்டிருந்தவனுக்கு அவள் பேச்சு காதில் விழவில்லை. தன்பாட்டில் பேசிக்கொண்டு போனான். “அம்மாவுக்கு எப்பவுமே என்னைக் கண்டா ஆகாது, லதா. சூரியா நல்ல கலரா இருப்பான். அதனால, அப்பா, அம்மா ரெண்டுபேருக்குமே அவன்தான் செல்லம்,” என்றவன், தானறிந்த காரணத்தையும் விளக்கினான்: “அவன் சிகப்பு, நான் கறுப்பு. அதான்!“

அவள் அலட்சியமாக அப்பால் சென்றாள், “விடுங்க! எப்பவோ சின்னப்பிள்ளையா இருக்கிறப்போ நடந்து முடிஞ்சுபோன சமாசாரம்!“ என்றபடி. போகிற போக்கில், “நாலு நாளா மழையைக் காணோம். ஒரே வெயில்! நான் போய், ரோஜாச் செடிங்களுக்கு ஐஸ்கட்டி போடணும்,“ என்றாள்.

கடந்தகால நினைவுகளிலிருந்து விடுபட முடியாது, திக்பிரமையாக அமர்ந்திருந்தான் தியாகு.

சுய பச்சாதாபத்துடன் அடிக்கடி வெளியாகிய பெருமூச்சும், கூடவே ஒலித்த சிறு முனகலும்தான் அவனுக்குத் துணையாக இருந்தன.

 

`தம்பிப் பாப்பா பாத்தியாடா? எப்படிச் செக்கச்செவேல்னு ராஜாமாதிரி இருக்கான்!’ என்று பெற்றவள் பெருமைபொங்கக் கூறியபோது, ஆறு வயதுச் சிறுவன் தியாகுவும் அவளுடைய பூரிப்பில் பங்குகொண்டான். பாப்பாவின் பட்டுக் கன்னத்தை ஒரு விரலால் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். அப்போது அவனுக்குத் தெரியவில்லை, தன் நிறமே தனக்கு எதிரியாகிவிடும் என்று.

நாட்கள் செல்லச் செல்ல, தனக்கு நினைவு தெரிந்த நாளாக மாறி மாறிக் கொஞ்சிய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் திடீரென்று தன்னைப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் தம்பிதான் என்றவரை புரிந்தது. அவன் ராஜாமாதிரி இருப்பதால்தானே பெருமையாக அவனை எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போகிறார்கள், தன்னை வீட்டிலேயே விட்டுவிட்டு? அன்று யாரோ சிநேகிதர் வீட்டில் பாடிக் காட்டினானாமே! அதற்கு எல்லாரும் கைதட்டினார்களாமே!

அம்மா அதைக் கதை கதையாகச் சொல்லும்போது, அந்தக் காட்சியை மனக்கண்ணால் பார்த்த தியாகுவுக்கு தான் பல படி தாழ்ந்துவிட்டதுபோல் இருந்தது. தன்னை மட்டும், `ஒக்காந்து படிடா. ஓயாம, என்ன விளையாட்டு?’ என்று மிரட்டத்தானே அப்பாவுக்குத் தெரிந்தது!

தன்னையொத்த பிற பையன்களைப் பார்த்துவிட்டு, ஆசையை அடக்க முடியாது, தனக்கும் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டபோது, `இவரு பெரிய இவரு! இதோ இங்கே இருக்கிற ஸ்கூலுக்கு நடந்து போகமுடியலியோ? வெயில்லே போனா, ஐயா கறுத்துடுவீங்களோ?’ என்று அப்பா நையாண்டி செய்தபோது, அம்மாவும் சேர்ந்து சிரித்ததுதானே அவனை வெகுவாகப் பாதித்தது!

சில ஆண்டுகள் கழித்து, சூரியா கேட்காமலேயே அவனுக்குப் புதிய சைக்கிள்! தியாகுவுக்கு அழுகை வந்தது. வெயிலில் அலைந்தால் சூரியா கறுத்துவிடுவானோ என்றுதானே இப்போது வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்?

அது ஏன் தானும், ‘ராஜா மாதிரி‘ சிவப்பாக இல்லை?

நான் பிறந்தே இருக்கக்கூடாது.

 

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்பு படிக்க விரும்பினான் தியாகு.

`வயசுதான் ஆகுதே தவிர, அதுக்கேத்த புத்தி இல்லியே! நீ ஒருத்தன் படிச்சு மேல போயிட்டா போதுமாடா? சூரியாவுக்கு இப்பத்தான் பன்னண்டு வயசாகுது. அவனுக்கு டியூஷன், டென்னிஸ், பாட்டு கிளாசுன்னு எவ்வளவு செலவு! வீட்டுக்கு மூத்தவனா, லட்சணமா, சம்பாதிச்சுப் போடுவியா..!’ என்று ஒரேயடியாக அவன் வாயை அடைத்துவிட்டார் அப்பா.

அதன்பின், சூரியாவை பதினைந்து வயதிலேயே அண்டைநாடாகிய சிங்கப்பூருக்குப் படிக்க அனுப்பியபோதும், அவன் கேட்டபோதெல்லாம் பணத்தை அனுப்பியபோதும் தான் சிறுகச் சிறுகச் சாவதைப்போல இருந்தது தியாகுவிற்கு.

தட்டிக்கேட்பவர் எவரும் இல்லாததால் மனம் போனபோக்கில் நடந்த சூரியா, சில வருடங்களிலேயே உடலெல்லாம் வியாதியுடன் வந்து நின்றான்.

அம்மாதான் ஒரேயடியாக அழுதாள். `தங்க விக்கிரகம் மாதிரி இருப்பியே! இப்படிப் போயிட்டியேடா, கண்ணா!’  என்று.

தியாகுவுக்கும் வருத்தமாக இருந்தது. தனக்காக என்றாவது இப்படி உருகி இருப்பார்களா இந்த அம்மா?

இளைய மகன் தீய வழியில் போகிறான் என்று சந்தேகமறப் புரிந்தாலும், `வயசுக் கோளாறு!’ என்று அம்மா அவனுக்கு மன்னிப்பு அளித்தாள். கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தாள். அது போதாது, தனது போதைப்பழக்கத்தின் தேவைக்காக வீட்டிலேயே திருட ஆரம்பித்தான் சூரியா. அதன்பின் வீட்டுக்கு வருவதே அபூர்வமாகி, இறுதியில், அவன் போன இடமே தெரியாமல் போயிற்று.

அப்போது அதிர்ச்சியில் படுக்கையில் விழுந்தவள்தான். அடுத்தடுத்து, நடமாட்டம், பேச்சு என்று ஒவ்வொன்றாக இழந்தாள் அம்மா.

 

“இன்னுமா அப்படியே ஒக்காந்திருக்கீங்க?“ புன்சிரிப்புடன் வந்து அவனருகே அமர்ந்துகொண்டாள் லதா.

கள்ளம் கபடில்லாமல் இருக்கும் இவளையும் தன்னுடன் கலங்க வைப்பானேன் என்று தோன்ற, “உனக்கு எதுவும் எடுக்கலே?“ என்று கேட்டுவைத்தான் தியாகு.

“அது கிடக்கு! அத்தையை நினைச்சா பாவமா இருக்குங்க! ஒரேயடியா செல்லம் குடுத்து, தானே சின்னவரைக் கெட்டழிய வைச்சுட்டோமே அப்படின்னு உள்ளுக்குள்ளேயே அழுதுக்கிட்டு இருக்காங்க. வாயைத் திறந்து சொல்லவும் வழி இல்லாம போயிடுச்சு, பாவம்!” என்று அடுக்கிய லதா, சட்டென ஏதோ தோன்ற, “நல்லவேளை, உங்களுக்கும் செல்லம் குடுக்கல. இல்லாட்டி, நீங்க இப்படி கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்திருக்க முடியுமா? இல்லே, நான்தான் ஒங்களுக்குக் கிடைச்சிருப்பேனா?” விளையாட்டாககத்தான்  கேட்டாள்.

ஆனால், திடுக்கிட்டவனாய் அவளைப் பார்த்தான் தியாகு.

தன்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததில், பிறரது துயரங்கள் புரியாது போய்விட்டதா?

“சரி. வாங்க,” என்று அழைத்தவளை எதுவும் புரியாது பார்த்தான். “ஒங்களுக்கு ஒரு சட்டை பாத்து வெச்சுட்டு வந்திருக்கேன். போய் வாங்கிட்டு வரலாம். அதைப் போட்டா, ராஜா மாதிரி இருப்பீங்க!”

“வேணாம்பா. நான் தியாகுவாவே இருந்திட்டுப்போறேன்,” என்றான் தியாகு.

விமரிசனம்: அப்பப்பா, என்ன அறிவுரைகள், என்ன ஆலோசனைகள்! ஒரு சிறுகதையின்கீழ் எத்தனை தீர்வுகள்! மாறுபட்ட முடிவு. நல்ல படைப்பு.

எம்.எஸ்.கீத்தா, தாமான் டேசா, ஜாவி

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) Copyright © 2015 by நிர்மலா ராகவன், மலேசியா is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book