2

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன்.

“என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து.

“அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு, பணமும் குடுக்கறாங்கல்ல? அப்புறம் என்ன? சும்மா தொணதொணத்துக்கிட்டு..!”

கணவர் களைப்புடன் வீடு திரும்பியவுடன் தான் சுயநலத்துடன் பேச்சுக்கொடுத்தது  தவறுதான் என்று, உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே போனாள் வசந்தா.

சிறிது நேரத்தில் அவள் கொண்டுவைத்த தேத்தண்ணீரை வெறித்துப் பார்த்தார் நடராஜன். அவர் உள்ளம் அதைவிட சூடாக இருந்தது.

மனைவி நாடகம் எழுத, அவளுடைய கற்பனையில் உருவான ஐந்து பாத்திரங்களில் தானும் ஒரு சிறிய அங்கமானது குறித்து அவமானம் ஏற்பட்டது.

அவளுடைய பெயர்மட்டும் சற்று உரக்க அறிவிக்கப்பட்டதோ?

`என்னங்க, நடராஜன்! பேருக்கு ஏத்தமாதிரி, சக்திக்கு அடங்கின சிவனா ஆயிட்டீங்களே! இனிமே நீங்கதான் பேரை மாத்தி வெச்சுக்கணும் — மிஸ்டர் வசந்தா அப்படின்னு!’ வேடிக்கையாகச் சொல்வதுபோல், சகநடிகர்கள் உசுப்பேற்றினார்கள்.

அந்தக் கைலாய பரமசிவன் தன் உடலில் பாதியை பார்வதியுடன் பகிர்ந்துகொண்டு, அவளுடன் ஒன்றாக இயங்கினாராம். யாரோ புராண காலத்துக்குப் போய் பார்த்தமாதிரிதான்!

அட, அந்தக் காலத்திற்கு அது சரியாக இருந்திருக்கலாமோ, என்னவோ! இப்போதோ, ஆணுக்கு நிகராக உரிமை கொண்டாடும் வசந்தா போன்ற பெண்களால்தான் குடும்ப நிம்மதியே போய்விடுகிறது. நண்பர்களுக்குத்தான் எத்தனை கேலிப்பொருளாக ஆகிவிட்டோம்!

 

கோலாலம்பூரில், அங்காசாபுரி (ANGKASAPURI) என்ற பெரிய வளாகத்துள் எதிரெதிரே இருந்தன மலேசிய தொலைகாட்சி,  வானொலி நிலையங்கள். நாடகத்தில் நடித்து முடித்ததும், எப்போதும்போல் காண்டீனில் அமர்ந்து, அரட்டையே முக்கிய குறிக்கோளாய், ஆனால் மீ பிரட்டலை (நூடுல்ஸ்) சாப்பிடுவதுபோல் பாவனை செய்ய இன்று அவர் மனம் ஒப்பவில்லை. பிறரது தலையை உருட்டும்போது இருக்கும் சுவாரசியம், `நான் அவர்களைவிட மேலானவன்!’ என்று அப்போது எழும் கர்வம், தானே பிறரது வாய்க்கு அவலாக மாறும்போது கிடைப்பதில்லையே!

அவர்களிடமிருந்து கத்தரித்துக்கொண்டு வந்தாலும், தன்னையும், வசந்தாவையும்பற்றித்தான் பேசுவார்கள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது நடராஜனுக்கு.

என்ன பேசுவார்கள்?

`இவரும்தான் முப்பது வருஷமா `நடிகன்’னு பேரை வெச்சுக்கிட்டு காலந்தள்ளறாரு! பளபளப்பான சட்டையும், அதிலே எக்கச்சக்கமா செண்டும் போட்டுக்கிட்டு, நாலுபேர் கூடற எல்லா எடத்துக்கும் தப்பாம வந்து, ஏதாவது சண்டை இழுத்து, அதனாலேயே எல்லாருக்கும் தன்னைத் தெரியறமாதிரி செய்துக்கிட்டிருந்தா ஆச்சா?’ என்று பழித்துவிட்டு, அதே மூச்சில், `அதுவே, அந்தம்மா இருக்காங்களே! குடத்துக்குள்ளே இருக்கிற விளக்கு!’ என்று வசந்தாவை எங்கோ கொண்டு வைப்பார்கள்.

அவர்கள் பேசுவதை இவர் ஒன்றும் கற்பனை செய்து பார்க்கவேண்டி இருக்கவில்லை. சாடைமாடையாக, இவர் எதிரிலேயே பல முறை பேசி வந்ததுதானே!

 

வசந்தா முதன்முதலாக எழுத ஆரம்பித்தபோது, `இவள் என்ன பெரிசா கிழிச்சுடப்போறா!’ என்று தான் அசிரத்தையாக இருந்தது தப்பு என்று இப்போது, காலங்கடந்து யோசனை வந்தது.

அப்போதெல்லாம் அவரிடமே பிறர் அவளைப் பாராட்டிப் பேசியபோது, பெருமையாகத்தான் இருந்தது. நண்பர்களுடையதைவிட விலை அதிகமான விளையாட்டுச் சாமான் தன்னிடம் இருப்பதற்காகப் பெருமை கொள்ளும் சிறுவனது மனநிலைக்கு ஆளானார். மனைவி தன் உடைமை.  ஆகவே, தான் அவளைவிட மேலானவன் என்பதுபோல் நடந்துகொண்டார். அதுவும் பொறுக்கவில்லை பிறருக்கு. பலவாறாகத் தூபம் போட்டார்கள்.

`உன் மனைவி பேரும் புகழுமாக இருந்தால், அதில் அவளுக்குத்தான் பெருமை. உனக்கென்ன வந்தது?’

`நீ இப்படியே அவளை வளரவிட்டால், நாளைக்கு உன்னையே மதிக்கமாட்டாள், பார்!’

நடராஜனுக்குப் பயம் வந்தது.

இப்போது இவள் எழுதி என்ன ஆகவேண்டும்? அலுவலக உத்தியோகத்துடன், அவ்வப்போது மேடை, வானொலியில் நடிப்பதாலும் தனக்குக் கிடைப்பதே போதாது?

அட, பணத்தைப் பெரிதாக எண்ணியா தான் நடிக்கப் போனோம்?

எல்லாரையும்போல, `கலைக்குத் தொண்டு செய்கிறேன்!’ என்று வெளியில் மிதப்பாகச் சொல்லிக்கொண்டாலும், செய்யும் தொண்டு தனக்கேதான்; தன் பெயர் பிரபலமாக வேண்டும் என்ற சுயநலத்தால்தான் என்று அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன கேவலமாம்? எல்லாம் வல்ல இறைவனே புகழ்ச்சிக்கு அடிமை! கடவுளைப் புகழ்ந்து வேண்டுபவருக்குத்தான் நல்லது நடக்கிறது. அவனுடைய படைப்பான தான் மட்டும் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும் என்று தன்னைத்தானே சமாதானமும் செய்துகொண்டார்.

அபூர்வமாக, எவளாவது, `நான் உங்கள் விசிறி!’ என்று இளிச்சவாய்த்தனமாக சொல்லும்போது, என்னவோ கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டமாதிரி பிரமை ஏற்படும் நடராஜனுக்கு. மெனக்கெட்டு வருவித்துக்கொண்ட பெரியமனிதத்தனத்துடன், தலையைச் சற்றே அண்ணாந்து, எங்கோ பார்த்தபடி ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.

வீட்டுக்கு வந்ததும், வாய் ஓயாமல், தன்னைப்பற்றி தன் ரசிகைகள் என்ன நினைக்கிறார்கள், என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒன்றைப் பத்தாக்கி மனைவியிடம் கூறுவார். அவர் எது சொன்னாலும், புன்னகையுடன் கேட்டுக்கொள்வாள் வசந்தா.

இப்போதும், நண்பர்கள் தன்னை ஓயாது மட்டந்தட்டுவதைச் சொன்னார், மிகுந்த ஆற்றாமையுடன் — `விழுந்துட்டேம்மா!’ என்று தாயிடம் வந்து அழும் குழந்தையைப்போல.

“விட்டுத் தள்ளுங்க!” என்றாள் வசந்தா.

“நானும் அதான் நினைச்சேன். அவங்க பெண்டாட்டி எல்லாம் ஒரே மக்கு. அதான் அவங்களுக்கு வயத்தெரிச்சல்!” என்றவர், “எனக்கு அதிர்ஷ்டம்! ஒன்னைமாதிரி புத்திசாலியான பெண்டாட்டி வாய்ச்சிருக்கு!”

வசந்தாவுக்கும் பூரிப்பாக இருந்தது. இன்னும் நிறைய எழுதி, கணவனுடைய பெருமையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.

 

வேலை முடிந்து, அப்போதுதான் வீடு வந்திருந்தார் நடராஜன்.

“பிளாஸ்கில் டீ வெச்சிருக்கேன்,” என்ற குரல் அசரீரியாகக் கேட்டது. தன்னைக் கவனிக்காது, தன்பாட்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவியின் போக்கு உறுத்தியது. கட்டின கணவனைவிட இவளுக்கு எழுதுவதால் கிடைக்கும்  பெயரும், புகழும்தானே பெரிதாகிவிட்டன என்ற ஆத்திரத்துடன், “அந்த டீயை நீ வந்து எடுத்துக் குடுத்தா கொறைஞ்சு போயிடுவியோ?” என்று கத்தினார்.

எதுவும் பேசாது, பேனாவை மூடி வைத்துவிட்டு எழுந்தாள் வசந்தா. அன்றையிலிருந்து அவர் பார்க்க அவள் எழுதவில்லை. ஆனால், அவளுடைய எழுத்துப் படிவங்கள் என்னமோ வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.

நடராஜன் தன் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

“வீணா ஒடம்பைக் கெடுத்துக்காதேம்மா. இந்த தள்ளிப்போன நாட்டில, எழுதறதுக்கு ஒரு பயல் காசு குடுக்கறதில்ல. அப்புறம் எதுக்காக எழுதறது? கண்ணுக்குக் கீழே எப்படிக் குழி விழுந்துபோச்சு, பாரு!” என்றார், அன்பு சொட்டச் சொட்ட.

அவருடைய கரிசனம் வசந்தாவுக்கு வேண்டியிருந்தது. ஆத்திரப்பட்டவர் இப்படி மாறி விட்டாரே!

“பொழுது போகணுமே!” என்றாள் அப்பாவித்தனமாக.

“சினிமா, கச்சேரின்னு நாலு எடத்துக்குப் போயிட்டு வா. இல்லே, ஓய்வா, வீட்டிலேயே வீடியோ பாரு!”

சில நாட்கள் கணவர் சொன்னதுபோல் செய்துபார்த்தாள் வசந்தா. மனதில் ஏதோ வெறுமை. எதையோ இழந்ததுபோல் இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்து, மீண்டும் எழுத முயன்றாள்.

இப்போது ஏதேதோ பயம் எழுந்தது. கணவர் வீடு திரும்புவதற்குள் எழுதி முடிக்கவேண்டும். அவருக்குச் சுடச்சுட தேநீர் போட்டால்தான் பிடிக்கும். இல்லையேல், மௌனமாக அமர்ந்து, பெருமூச்சாலேயே தான் கவனிப்பாரின்றி வாடுவதை உணர்த்துவார். அவளுக்கு அவரை அப்படிப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தான் தன் கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்ற உறுத்தல் உண்டாகும்.

இப்போது ஒவ்வொரு வரி எழுதியபிறகும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். உருப்படியாக எதுவும் எழுத முடியவில்லை.

இரவில் அவர் தூங்கியபின் எழுதினால், இந்தக் குழப்பங்கள் எழாது என்று தீர்மானித்தாள்.

தூக்கக் கலக்கத்தில் கையை விசிறிப் போட்டபோதுதான் அவள் தன் பக்கத்தில் இல்லாததை உணர்ந்தார் நடராஜன். தூக்கம் கலையாமலேயே, அசைந்து அசைந்து அவளைத் தேடி வந்தார்.

“இப்படித் தனியா படுக்கிறதுக்கா வசந்தி, ஒன்னைக் கட்டிக்கிட்டேன்?” என்று அவர் கேட்டது அவள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

வசந்தாவுக்கு இப்போது குழப்பமில்லை. அவளுக்குப் புரிந்தது.

`ஆண்’ என்பவன் உருவத்தில் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கும் குழந்தை! சிறு வயதில் அம்மாவின் ஏகபோக கவனிப்புக்காக தம்பி, தங்கைகளுடன் போட்டி போட்டதைப்போல, இப்போது மனைவியின் பரிபூரண கவனிப்பும், அக்கறையும் தன் ஒருத்தனுக்காகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் புத்தி அவனுக்கு!

அத்துடன், ஒரு பெண் தனக்கு அடங்கி இருப்பதைத்தான் சராசரி ஆண் விரும்புகிறான். இது கற்காலத்திலிருந்து வரும் நியதி. கொடிய விலங்குகளைத் தனியே எதிர்க்கும் சக்தியின்றி, தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்தாளே, பெண்! அப்போது அவனுக்கு ஏற்பட்ட பெருமிதம் இன்றும் அவனுக்குத் தேவைப்படுகிறது.

தன்னை நாடாது, தன்னை மீறி அவள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால், அடிப்படை ஆண்மையிலேயே சந்தேகம் தோன்ற, அந்த எண்ணத்தின் பயங்கரத்தில் அவள் வீழ்ச்சி காண வழி வகுக்கிறான்.

 

இப்போதெல்லாம் யாராவது வசந்தாவை, “ஒங்க கதைகளைப் பாக்க முடியறதில்லியே?” என்று உள்ளூர மகிழ்ச்சியுடன், ஆனால் வார்த்தைகளில் கரிசனம் சொட்டக் கேட்கும்போது,  `ஆமா! ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லை இதால! (100 ஸென் (காசு) = 1 மலேசிய ரிங்கிட்). நேரம்தான் தண்டம்,’ என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

வெளியே,  “எங்கே! வீட்டு வேலையே சரியா இருக்கு. அதோட, எங்க வீட்டுக்காரர் கைப்பிள்ளை மாதிரி. அவருக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் நான்தான் பாத்துப் பாத்து செய்யணும்!” என்று பெருமை பேசுகிறாள்.

தன்னைப்போன்று, `குடும்பமே பெண்ணாகப் பிறந்ததின் லட்சியம்’ என்ற கொள்கையுடைய மற்ற பெண்களுடன் சேர்ந்து வெளியே போகிறாள், அரட்டை அடிக்கிறாள்.

அவர்களைப்போல் இல்லாது, கணவரை மீறிக்கொண்டு புகழ்ப்பாதையில்  பீடுநடை போடும் யாராவது அபூர்வமான பெண்ணைப்பற்றி மட்டந்தட்டிப் பேசுகையில், ‘நல்ல வேளை, எனக்குப் புத்தி வந்ததே!’ என்று திருப்திப்பட்டுக் கொள்கிறாள்.

விமரிசனம்: ஆண்களுக்கே உள்ள இயற்கையான மனப்போக்கை இடித்துக்காட்டி எழுதியுள்ளார். ஆண்களை நன்றாகவே புரிந்துவைத்து, ஒளிவு மறைவு இல்லாமல் விளக்கமாகவே எழுதியுள்ளார்.

அன்புராயன்லோகநாதன், பெட்டாலிங்ஜெயா

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) Copyright © 2015 by நிர்மலா ராகவன், மலேசியா is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book