8

“இன்னிக்கு ஏதாவது விசேஷமா? வீட்டு வாசலிலே தோரணம் தோரணமா கலர் லைட்டு தொங்குதே?”

டாக்ஸி டிரைவர் பெரிதாகச் சிரித்தார். “இங்க தினமும் விசேஷந்தாங்க! நித்ய கல்யாணின்னு சொல்றதில்ல? அவங்க இருக்கிற தெரு இது!” சாமிநாதன் விழிப்பதைக் கண்டு, “இப்படி லைட் போட்டிருந்தா, இந்த வீட்டிலேருந்து இன்னிக்கு ராத்திரி ஒரு பொண்ணு டான்ஸ் ஆடப் போயிருக்குன்னு அர்த்தம். நிறையப் பணம் கிடைக்குமில்ல? அந்த சந்தோஷத்தை இப்படிக் காட்டிக்கறாங்க!”

ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டதைப்போல் தன்னைக் குறுக்கிக்கொண்டார் சாமிநாதன். இந்தமாதிரி அனுபவத்தைத் தேடித்தான் அவர் மும்பைக்கு வந்திருந்தார் என்பது வேறு விஷயம்!

 

எழுத்தாளர் என்று பெயர்தான். ஒரு பட்டம், ஒரு பொன்னாடை?

ஊகும். எதற்கும் வழியைக் காணோம்.

அவரும்தான் என்ன செய்வார், பாவம்! ஓடுகாலியான தகப்பனைப்போல் மகனும் ஆகிவிடக்கூடாது என்று தாய் அரும்பாடுபட்டு சாமிநாதனை வளர்த்திருந்தாள். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக, குழந்தைகளோடு குழந்தையாகவே ஆயுளில் பெரும்பகுதியைக் கழித்துவிட்டார்.

இதனால் நண்பர்களுக்கு சற்று குறைதான். அனைவரும் மலேசியாவின் வடகோடியில் இருந்த ஜித்ரா என்ற இடத்தில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். தங்களில் ஒருவருக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்தால், அவருக்கு அனுபவம் அளிக்கும் `நல்லெண்ணத்தோடு,’ புகிட் காயு ஹிதாம்  (BUKIT KAYU HITAM) என்ற இடத்துக்கு அழைத்துப் போவார்கள். தாய்லாந்துக்கும், மலேசியாவிற்கும் இடையிலிருந்த அவ்விடத்தில் வரி இல்லாது சகல பொருட்களும் கிடைக்கும். பெண்களும் கூடத்தான்.

சாமிநாதன் மட்டும், ஆண்பிள்ளையாய் லட்சணமாய்,  ஒரு முறைகூட  அவர்களுடன் சேர்ந்து வர நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டதில் அவர்களுக்கு வந்த ஆத்திரத்தில், அவருக்கு `சாமியார்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

 

கொஞ்ச காலமாகவே சாமிநாதனுக்கு ஒரு குழப்பம். `நான் ஆபாசமா எழுதவே மாட்டேம்பா!’ என்று பெருமை பேசிக்கொள்ளலாம். ஆனாலும், உலக அனுபவம் பரிபூரணமாக இல்லாததால்தான் தன் கதைகள் எல்லாமே நேர்மை, நாணயம், தன்மானம் என்று ஒரே மாதிரியாக அமைந்து விடுகின்றனவோ?

இதை மாற்ற வழி?

ஏதாவது புதிய இடத்திற்குச் சென்று, அபூர்வமான மனிதர்களைச் சந்தித்தால்?

தீர யோசித்ததில் வந்ததுதான் இந்த இந்தியப் பயணம். `அந்தமாதிரிப் பெண்களை’ப் பார்த்துப் பேசிவிட்டு– வெறுமனே பேச மட்டும் பேசி — அந்த அனுபவத்தை உணர்ச்சிபூர்வமாக எழுதினால் என்ன?

போகும் இடமானது, மக்கள் ஓடிக்கொண்டே இருப்பதுபோல அவசரச் சூழ்நிலை கொண்டதாகவும், பிறரைப்பற்றி அநாவசியமான அக்கறை எடுத்துக் கொள்ளாததாகவும் இருக்க வேண்டும்.

தாய்லாந்து மிக அருகில் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் எவர் கண்ணிலாவதுபட்டுத் தொலைக்க நேரிடலாம்.

அப்படியெல்லாம் யோசித்து, மும்பை வந்து சேர்ந்தாலும், வெளிப்படையாக, `இந்த மாதிரி இடத்துக்குப் போங்க!’ என்று வாடகைக் காரோட்டியைக் கேட்க வாய் வரவில்லை.

“பாக்க என்னென்ன இருக்கோ, அங்கேயெல்லாம் சுத்திக் காட்டுங்க!’ என்றவரின் நெற்றியில் பட்டை பட்டையாக இருந்த விபூதியைக் கவனித்த கந்தசாமி, “மஹாலட்சுமி கோயில் இங்க ரொம்ப விசேஷம்!’ என்று அழைத்துப் போனார்.

 

தெருவை ஒட்டி, அட்டைகளைக்கொண்டு எழுப்பப்பட்டிருந்த `வீடு’களின் வெளியே குளித்ததே கிடையாது என்று அறிவிப்பதுபோல் புழுதியும், சடையுமான தலையும், நிர்வாணக் கோலமும் கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், மேற்கத்திய பாணியில் உடையணிந்து, பெரிய பெரிய பங்களாக்கள் நிறைந்த அகலமான தெருக்களில் உயர்ந்த ஜாதி நாய்க்குட்டியை உலவ அழைத்துப்போகும் `பெரிய’ மனிதர்கள், அவலமான இந்த மனித வாழ்க்கையைச் சகிக்க பொறுமையை வேண்டிக் கொள்வதைப்போல் ஒரு கோயிலுக்குள் நுழைய நூற்றுக் கணக்கானோர் தெருவெல்லாம் அடைத்துக்கொண்டு நின்ற கியூ வரிசை — இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல வகையான காட்சிகளைக் கண்விரிய பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் டாக்ஸி அந்த வண்ணத் தெருவுக்குள் நுழைந்திருந்தது.

`கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி!’ என்ற ஒரு சிறு மகிழ்வு சிலிர்த்தெழ, `சீச்சீ! எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுவது!’ என்று மானசீகமாக கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

“இதுக்கு பேரு ஃபாரஸ்ட் ரோடு. ஆனா, வேற பேரு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும்!”

சட்டென நிமிர்ந்தார் சாமிநாதன். மனத்துடிப்பு வெளியில் தெரியக்கூடாதே என்ற பதைப்பு உண்டாயிற்று.

“பாத்தா நல்லவராத் தெரியறீங்க! ஒங்களைப் போய் கெடுப்பானேன்!”

அப்போது எழுந்த பெருமையில், அது என்ன பெயர் என்று கேட்க நினைத்தது அடங்கிப் போயிற்று.

‘பாத்தீங்களா? இந்தப் பொண்ணுங்கதான்!” கார் போன வேகத்திலோ, படபடப்பிலோ, சரியாக எதுவும் பிடிபடவில்லை. “கொஞ்சம் மெதுவாப் போறீங்களா?” கேட்பதற்குள் வியர்த்துவிட்டது சாமிநாதனுக்கு.

இப்போது தெரிந்தது. தெருவை ஒட்டி, மாடியும் கீழுமாய் இருபுறமும் காம்பவுண்டு இல்லாத வீடுகள். வாசற்கதவு அகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் நெருக்கமாகப் பத்துப் பதினைந்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாவற்றையும் மீறி, அவர்கள் முகத்திலிருந்த அலுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்குமேல் பார்ப்பதற்குள், கார் நகர்ந்து விட்டிருந்தது.

வீடுகளின் வெளியேயும் ஆங்காங்கே சிறு சிறு கும்பல்களாய் பெண்கள். கூடவே ஒரே ஒரு ஆள். எல்லாப் பெண்களுமே வெள்ளை வெளேர் என்று பவுடர் பூசியிருந்தார்கள். `ஒரு புடவைகூட காணோமே!’ என்ற எண்ணம் வந்தது சாமிநாதனுக்கு.

எல்லாருமே பின்புறத்தைப் பெரிதாகக் காட்டும் பாவாடை, உடலை இறுக்கிப் பிடித்த, இடுப்புக்கீழ் தொங்கும் சட்டை அணிந்திருந்தார்கள். நீண்ட தலைமுடியைப் பின்னாது, `புஸ்’ஸென்று பரத்தி விட்டுக்கொண்டு இருந்தனர். பூவும் கிடையாது. ஆனால், மலிவான, நிறைய நகைகள் என்ற் பார்த்தமாத்திரத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார் நமது எழுத்தாளர்.

குறுகலான அத்தெருவில் கையெட்டும் தூரத்தில் நின்றிருந்த அந்த இளம்பெண்களை — பதினேழு வயதுக்குமேல் இராது — ஆர்வத்துடன் பார்த்தார்.

டாக்ஸி கடக்கும்போது, சாமிநாதனைப் பார்த்து தோழமையுடன் சிரித்தாள் ஒருத்தி. அழைப்போ? வெடுக்கென தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டார்.

அவரது பதட்டத்தை உணர்ந்தவர்போல், “நல்ல குடும்பத்துக்காரங்க யாரும் இங்க வரமாட்டாங்க. ஒங்களைமாதிரி, வெளிநாட்டிலிருந்து வர்ற டூரிஸ்டுங்கதான் வேடிக்கை பாக்க வருவாங்க!” என்றார் கந்தசாமி.

இப்போது டாக்ஸி வேறு ஒரு தெருவில் போய்க்கொண்டு இருந்தது. “அந்த வீட்டில பாத்தீங்களா?”

பார்த்தார். நாற்பது வயதுக்குமேல் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு.

“மும்பையில நல்ல பொம்பளைங்க இப்படி வீட்டுத் திண்ணையில வந்து ஒக்கார மாட்டாங்க. இது வாடிக்கைக்காக காத்திருக்குன்னு அர்த்தம்!”

விஷயம் இவ்வளவு சுவாரசியமாகப் போகிறதே, சம்பந்தப்பட்டவர்களையே பார்த்துப் பேசினால், இன்னும் எவ்வளவு விஷயம் கிடைக்கும் என்று சாமிநாதன் யோசிக்க ஆரம்பித்தார்.

வித்தியாசமான தகவல்களை வெளியிட்டால், மீட்டருக்குமேல் நிறையப் பணம் கொடுப்பார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்த கந்தசாமி தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார். “முந்தி இந்த வீட்டிலேருந்து வாடிக்கையா  ஒரு பொண்ணை தினம் ராத்திரி கிளப்புக்குக் கூட்டிட்டுப் போவேன், ஸார். டான்ஸ் முடிஞ்சதும், திரும்பக் கொண்டு வந்து விட்டுடுவேன்”. சிறிது நேரம், ஏதோ நினைப்பில் ஆழ்ந்துபோனார். “ஒரு தடவை பாருங்க, அதை வீட்டுக்கு வெளியே இறக்கி விடறேன், ரெண்டு குண்டனுங்க எங்கேயிருந்தோ பாய்ஞ்சு வந்து, பக்கத்தில தயாரா நின்ன காரில தள்ளி விட்டுட்டாங்க. கார் பறந்திடுச்சு!”

“ஐயையோ!” ஒரேயடியாகப் பதறினார் சாமிநாதன். “போலீசுக்குச் சொன்னாங்களா?”

“நீங்க வேற! போலீஸ் எங்கேன்னு போய் தேடும்?”

”கடத்திட்டுப் போனாங்க, சரி. அப்புறம் என்ன செய்வாங்க?” கூசியபடி கேட்டார்.

உலகம் என்றால் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கத்தான் செய்யும்! அம்மா இப்படியா வளர்ப்பார்கள் தன்னை, உலகில் கெட்டதே கிடையாது என்று நம்பும் அளவுக்கு! தனக்கு `சாமியார்’ என்ற பெயரை சிநேகிதர்கள் சூட்டியிருப்பது நியாயம்தான் என்ற வருத்தம் லேசாக எழுந்தது.

“யாராவது பணக்காரன்கிட்ட வித்துடுவாங்க. அடிக்கடி நடக்கிறதுதான்!” அலட்சியமாகச் சூள் கொட்டினார். “இப்ப வர்ற பொண்ணோட காவலுக்கு ரெண்டு ஆளும் வருது. சில பேர் இங்கேயே நேரே வந்து, அவங்களுக்குப் பிடிச்ச அழகான பொண்ணாப் பாத்து வாங்கி, அதுக்குத் தனி வீடு, காருன்னு நல்லா வெச்சுப்பாங்க”.

படித்தவன் என்று பெயர்தான். தனக்குத் தெரியாத எவ்வளவு விஷயங்களை இந்த ஏழைத் தொழிலாளி தெரிந்து வைத்திருக்கிறான் என்ற பொறாமை எழ, “நீங்களும் ஒரு பொண்ணுக்காக தினமும் இங்க வர்றதாச் சொன்னீங்களே!” என்றார். எண்ணியதைவிட இளக்காரமாக வந்தது அவர் குரல்.

“அது வேலைக்காக, ஸார்!” அழுத்தந்திருத்தமாகப் பதில் வந்தது. “என் வேலை டாக்ஸி ஓட்டறது. அந்தப் பொண்ணோட வேலை டான்ஸ் ஆடறது. அதுக்குமேல எங்களுக்குள்ளே வேற ஒரு சம்பந்தமும் கிடையாது!” குரலில் சிறிதும் கோபம் காட்டாது, தன் வாதத்தை டிரைவர் எடுத்துச்சொல்ல, சாமிநாதன் வெட்கினார்.

இம்மாதிரியான பெண்களுடன் எவ்வகையிலோ தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாரும் தகாத நடத்தை கொண்டவர்கள் என்று நினைப்பது எவ்வளவு மடமை! ஏன், இப்போது தானே இல்லையா? இப்படிப்பட்ட தெருவில், விளக்கு வைக்கும் நேரத்தில் போகிறோமே, அதனால் `கெட்டவன்’ என்ற் அர்த்தமா, என்ன!

“எல்லாருமே ஹிந்திக்காரங்களா?” பேச்சைத் தொடர, ஏதோ கேட்டுவைத்தார்.

“எதுக்கு ஸார் கேக்கறீங்க?”

“சும்மாத்தான்!” என்றார் அவசரமாக.

`இந்த மாதிரி சற்றி வளைத்துப் பேசுகிறவர்கள் எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன்!’ என்பதுபோல் கந்தசாமி அவரைத் திரும்பிப் பார்த்தார்.

சாமிநாதன் அவசர அவசரமாக, “நான் கதையெல்லாம் எழுதறவன். நல்லது, கெட்டதுன்னு பாக்கிறதில்ல. எல்லா விஷயமும் எனக்கு ஒண்ணுதான்!” என்று சப்பைக்கட்டு கட்டினார்.

“அப்படிங்களா? கேரளாவைச் சேர்ந்தவங்க ஒருத்தர் இருக்காங்க. சுமாரா தமிழ் வரும். மத்த மேடம் எல்லாம் ஹிந்திதான்!”

“தென்னிந்தியாவிலேருந்துகூட இங்க வர்றாங்களா!”

“நல்ல பணமில்ல? நேபாளத்தைச் சேர்ந்த பொண்ணுங்ககூட இருக்கு. ஆனா, கேரளப் பொண்ணுங்களுக்கு கிராக்கி அதிகம்!”

`ஏன்?’ என்று சாமிநாதன் கேட்கவில்லை. அந்தக் காலத்து லலிதா, பத்மினி, கே.ஆர்.விஜயாவிலிருந்து, இன்றைய நயன்தாராவரைக்கும் வரிசையாகப் பல திரையுலகத் தாரகைகள் அவர் கண்முன் வந்து மறைந்தார்கள்.

அப்படிப்பட்ட அழகி ஒருத்தியுடன்.. சீ.. என்ன நினைப்பு இது, ஆராய்ச்சி செய்வதற்கென்று வந்த இடத்தில்!

`சும்மா பேசினால் என்ன வந்துவிடப் போகிறது!’ என்று மனம் எதிர்வாதம் செய்தது.

 

சாமிநாதனுடைய உள்ளுணர்வைப் புரிந்து கொண்டவள்போல் அந்த மேடம் கூறினாள்: “அம்பிகைகூடப் போங்க. எது வேணுமானாலும் கேட்டுக்குங்க!”

பொடி வைத்துப் பேசுகிறாளோ?

அவளைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது அவருக்கு. பிறர் உழைப்பில் உட்கார்ந்து தின்றே பருத்த உடல். ஐம்பது வந்திருக்கும். ஆனால், வயதுக்கு மீறிய அலங்காரம்.

யோசியாது, அவள் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்தபோது, தன்னிச்சையாகப் புத்தி அதை மலேசிய ரிங்கிட்டுக்கு மாற்றிப் பார்க்க, `பரவாயில்லை. கொஞ்சம்தான்!’ என்ற திருப்தி ஏற்பட்டது.

முகமெல்லாம் பூரிப்பாக வந்தாள் அம்பிகா. சிறிய அந்த அறையின் கதவை உள்ளே தாளிட்டுவிட்டு, உரிமையுடன் கட்டிலில் அவர் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.

ஒரு பெண்ணுடன் இப்படி தனித்து இருப்பதே ஏதேதோ உணர்வுகளைத் தோற்றுவிக்க, மிக நெருக்கமாக, இடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளைப் பார்க்கவும் திராணியின்றி, அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டார் சாமிநாதன்.

ஒருவழியாக, கேள்விக் கணையைத் துவங்கினார். “நீ எப்படி இங்க வந்து சேர்ந்தே?”

“எங்கம்மாதான் அனுப்பினாங்க’.

சாமிநாதன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. “படிச்சிருக்கியா?”

“எங்கே! நாங்க எட்டு பிள்ளைங்க. அப்பா எங்கேயோ ஒழிஞ்சு போயிட்டாரு. மேடம் எங்க கிராமத்துக்காரங்கதானே! அம்மாகிட்ட சொன்னாங்க, `மொதல்ல ஐயாயிரம் ரூபா குடுத்து  இவளை கூட்டிட்டுப் போறேன். ஆறு மாசம் கழிச்சு, மாசம் பத்தாயிரம் அனுப்பறேன்’னு. இப்ப அம்மா சொந்த வீடு வாங்கி இருக்காங்க!” பூரிப்புடன் சொன்னாள். “நான்தான் படிக்காத முட்டாளாகிட்டேன். ஆனா,  தம்பி, தங்கச்சிங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போறாங்க. வயிறு நிறையச் சாப்பிடறாங்க!” அவள் பட்டினி கிடந்த நாட்களை நினைவில் கொண்டு சொன்னாள்.

இவள் செய்யும் தொழில் தெரிந்தால், உடன்பிறந்தவர்கள் இவளை ஏற்பார்களோ என்ற சந்தேகம் எழ, “அப்புறம் நீ ஒங்க வீட்டுக்குப் போனியா?” என்று கேட்டார்.

“வேலையை விட்டுட்டு எங்கே போறது!”

சற்று யோசித்துவிட்டு, “இந்தமாதிரி தொழிலுக்கு வந்திருக்கியே! வியாதி வந்து வெச்சா?” என்று கேட்டார்.

“அதான் வாராவாரம் டாக்டர் வருவாரே! நாளைக்குக்கூட வருவாரு!”

“ஆனா.., வியாதி வராம.. பாதுகாப்பா..,” விஷயத்தைப் பிட்டுச் சொல்ல முடியாது விழித்தார்.

“ஓ!” என்று விளங்கிக் கொண்டவள், சாமிநாதன் சற்றும் எதிர்பாராதவண்ணம் தன் பாவாடையை வலதுகால் தொடைக்குமேல் உயர்த்தினாள். அதில் நீண்டதொரு வடு.

“ஒரு தடவை சொல்லிப் பார்த்தேன். `எனக்கே புத்தி சொல்ற அளவுக்குப் போயிட்டியாடி?’ன்னு, கழட்டிப் போட்டிருந்த பெல்ட்டாலேயே விளாசிட்டாரு ஒருத்தர். இங்க வர்றவங்களைப் பகைச்சுக்கிட்டா எப்படி பிழைக்க முடியும்!” என்று பெருமூச்சு விட்டவளின் முகம் சற்றே மலர்ந்தது. “அவர் சினிமா டைரக்டராம். எனக்கு சான்ஸ் குடுக்கிறதா  சொல்லி இருக்காரு!” எதிர்காலத்தைப்  பற்றிய நம்பிக்கையில் அவள் கண்கள் ஒளிர்ந்தன.

இவ்வளவு பேசியதே அதிகம் என்று களைப்புற்றவள்போல, “பேசியே பொழுதைக் கழிக்கிறீங்களே!” என்றாள். அவர் தொடைமேல் படர்ந்தது அவளது கரம். அதை மெல்ல விலக்கினார் சாமிநாதன்.

இருந்தாலும், மயங்கிவிடப் போகிறோமோ என்ற பயம் எழுந்தது. “இதெல்லாம் தப்புன்னு ஒனக்குத் தோணலியா?”

அவள் சற்று கோபமாக, “என்ன ஸார், பெரிய தப்பு? நாங்க வாங்கற காசுக்கு வஞ்சனை இல்லாம உழைக்கிறோம். பெரிய மனுஷங்க ரகசியமா செய்யறதை நாங்க பகிரங்கமா செய்யறோம். இது எங்க தொழில். சரி, தப்பு எல்லாம் மனசிலதான் இருக்கு!” என்றாள்.

யாரோ சொன்னதைக் கேட்டு, அப்படியே ஒப்பிக்கிறாள் என்று நினைத்தார் சாமிநாதன். ஒருக்கால், அனுபவம் இந்த இளம் வயதிலேயே இவளுக்கு அறிவு முதிர்ச்சியை அளித்துவிட்டதோ!

மேலே எதுவும் கேட்கத் தோன்றாது, கட்டிலிலிருந்து எழுந்தார் சாமிநாதன். மனம் கனத்திருந்தது.

 

அதற்கடுத்த சில வாரங்கள் பழனி, மதுரை, ராமேஸ்வரம் முதலிய இடங்களில் உள்ள கோயில் பிரகாரங்களைச் சுற்றினார். அம்பிகை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவளுடைய மெத்தென்ற கரம் தன் தொடைமேல் ஒரு வினாடி இருந்தது அடிக்கடி நினைவில் வந்துபோக, உடல் சிலிர்த்தது.

அப்படியொரு அவலமான வாழ்க்கையிலும் நிறைவைக் கண்டு, பிறர் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறாள், பாவம்!

இதில் பரிதாபம் என்ன வந்தது, அவளே சந்தோஷமாக இருக்கையில்?

அவசரப்பட்டுக் கிளம்பி இருக்க வேண்டாம், அவ்வளவு பணத்தைக் கொட்டி அழுதுவிட்டு!

புகையாகச் சுழன்று சுழன்று எழுந்த யோசனைகளை நிறுத்த ஒரே வழிதான். இனி எப்போது இந்தமாதிரி வாய்ப்பு கிடைக்கப் போகிறது!

 

சற்றும் தயக்கமின்றி அதே வீட்டின்முன் போய் நின்றார், மறுபடியும். அலைச்சலில் உடம்பு ஓய்ந்திருந்தாலும், மனம் துள்ளியது. `முதலிரவுக்குப் போகும் புது மாப்பிள்ளைக்கும் இப்படித்தான் இருக்குமோ?’ என்று எண்ணமிட்டார் அந்த கட்டைப் பிரம்மச்சாரி.

வீட்டு மாடியில் சுவரே இல்லாது, இரும்புக் கிராதிகள். அவற்றின் பின்னால் பெண்கள். ஒரே பார்வையில் தான் தேடி வந்தவள் அங்கு இல்லை என்று தெரிந்துவிட்டது.

“அம்பிகையா? அது இல்லீங்க. வேற ஒண்ணு..,” வந்த வியாபாரத்தை விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள் மேடம்.

“இல்ல. அவதான் வேணும்”. தன் குரலிலிருந்த உறுதி அவருக்கே ஆச்சரியமூட்டியது.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, குரலைத் தழைத்துக்கொண்டாள். “அதுக்கு எய்ட்ஸ். டாக்டரே சொன்னப்புறம் இங்கே வெச்சிருக்க முடியுமா? இங்க இருக்கிறவங்கல்லாம் நல்ல பொண்ணுங்கிற நம்பிக்கையிலதானே பெரிய மனுஷாள் எல்லாம் வர்றாங்க?”

அந்தப் பெரிய மனிதர்கள், தாம் நாடி வரும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதாவது நோயிருந்தால், அதை இந்த அபாக்கியசாலிகளுக்கு அளிக்கத் தயங்குவதில்லை. அப்படி சுயநலம் மிகுந்திருப்பவர்கள்தாம் பலம் கொண்டவர்களாக ஆக முடியுமோ? சாமிநாதனுக்கு உலகம் புரிந்தமாதிரி இருந்தது.

தாய் காட்டிய பாதை சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி வந்த அம்பிகா.

தான் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் உடன்பிறந்தோர் படிக்கிறார்கள், அம்மா சொந்த வீடு வாங்கிவிட்டார்கள் என்று பூரித்த, பொறுப்பான அம்பிகா.

சினிமா நடிகையாகி பெரிய அளவில் பெயரும், புகழும் சம்பாதிக்கலாம் என்ற அவளுடைய கனவு கனவாகவே போய்விட்டது. அவள் வாழ்வு அவ்வளவுதான். பிஞ்சிலேயே கருகிவிட்டது.

அழுகை வரும்போல இருந்தது சாமிநாதனுக்கு. இந்த உலகில் ஆண்களே இருக்கக்கூடாது. எல்லாரையும் கொன்றுவிட வேண்டும்.

ஆத்திரம் எழுந்தபோதே, `நல்ல வேளை, அன்று சபலப்படாததால் நான் பிழைத்தேன்!’ என்ற ஒரு திருப்தியும் கிளம்பியது.

“என்ன சாமிநாதன்! `ஊருக்கு’ப் போனீங்களே! அங்கே என்னென்ன பாத்தீங்க?” ஒரு நண்பர் கேட்க, சாமிநாதனை முந்திக்கொண்டு, இன்னொருவர் இடக்காகப் பதில் சொன்னார்: “சாமியார் என்ன செய்வாரு? கோயில், குளமெல்லாம் போய் சுத்திட்டு, புண்ணியம் தேடிட்டு வந்திருப்பாரு. என்னங்க?”

“அதேதான்!” என்றார் சாமிநாதன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) Copyright © 2015 by நிர்மலா ராகவன், மலேசியா is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book